×

ராமஜெயம் கொலை வழக்கு- 12 பேரிடம் நாளை முதல் உண்மை கண்டறியும் சோதனை

 

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் சென்னையில் நாளை முதல் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில், தென்கோவன் (எ) சண்முகம், சத்யராஜ், திலீப் (எ) லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ் குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் தென்கோவன் என்கிற சண்முகம் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில் மற்ற ஒப்புதல் அளித்த 12 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

அதனையடுத்து தென்கோவனை தவிர மற்ற 12 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நீதிபதி சிவக்குமார் அனுமதி வழங்கினார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு சார்பில் டெல்லியில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கும் அதற்கு அனுமதி வழங்கினர். அனுமதி  வழங்கப்பட்டதையடுத்து 12 பேரில் முதல்கட்டமாக மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் ஆகிய நான்கு பேருக்கு  நாளை மற்றும் நாளை மறுநாள்(18.01.23, 19.01.23) அவர்களுக்கு சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. அதற்கான சம்மன் அவர்கள் நான்கு பேருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் இவர்கள் நான்கு பேருக்கும் சோதனை நடத்தப்பட்டு அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கும் சோதனை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.