×

வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்கொண்டார்களா? - ஆர்.பி. உதயகுமார் கிண்டல்

 

வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்கொண்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது நகைச்சுவையாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.  

வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக மாறி கரையை கடந்தததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இருந்த போதிலும், திமுக அரசு மேற்கொண்ட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகவே மக்கள் பாதுகாக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது: வலுவிழந்த புயலை வலிமையோடு எதிர்த்தோம் என்று இன்றைக்கு மார்தடடும் முதலமைச்சர், வாயார தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது, இனி மிகத் தீவிரப்புயல் வந்தால் அதை எப்படி எதிர் கொள்வாரோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புலவர்களையும் வைத்து ஆதரவு நிலை வாழ்த்து பாடுகிறார். புயல் என்று சொன்னால் அது வலுப்பெற்று அதிதீவிரமடைந்து தொடர்மழை என்கிற நிலையிலே அதை வலிமையோடு எதிர்கொண்டு ஒரு உயிரிழப்பு இல்லாமல், பொருள் சேதமில்லாமல் எதிர்கொள்வது தான் வலிமையான பேரிடர் மேலாண்மையாகும்..
 அறிவு சார்ந்த பேரிடர் மேலாண்மை என்பது ,பேரிடர் வருவதற்கு முன்பாகவும், பேரிடர் எதிர்கொள்வதுபோதும் பேரிடர் வந்த பின்பும் மேற்கொள்கிற பணியாகும். வடகிழக்கு பருவமழை, தொடர் மழை, கன மழை இந்த மழை எதிர்கொள்வதற்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கவில்லை. 

தனக்குத்தானே வாழ்த்து பாடுவதில் யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒரு வலுவிழந்த புயலை நாங்கள் வலிமையோடு எதிர்கொண்டோம் என்று வாழ்த்து பாடுவதுதான் மக்களிடத்திலே ஒரு நகைச்சுவை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே இது அறிவு சார்ந்த அணுகு முறையில் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளை நாம் பட்டியலிட்டு ஒப்பிட்டு பார்க்கிற போது அது மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை தரவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். ஆகவே இனி வருகிற வடகிழக்கு பருவமழை நிலவரத்தை கலவரம் இல்லாமல் எதிர்கொள்வதற்கு இந்த அரசு முன்வருமா?. இவ்வாறு கூறியுள்ளார்.