×

பாஜகவில் சேர்ந்தால் நடுரோட்டில் நிற்பது நிச்சயம்- நாராயணசாமி

 

தமிழக சட்டபேரவை விவகாரத்தில் ஆளுநர் ரவியை, குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “தமிழக ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை ஆளுநர் அவமதித்துள்ளார். சொந்த கருத்தை திணிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. அத்துடன் தேசியகீதம் இசைக்கும் முன் வெளியேறி அவமதிப்பு செய்துள்ளார். அரசியலமைப்பை அவமதிப்பு செய்துள்ளதால் ஆளுநர் பதவியிலிருந்து ரவி விலகவேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத்தலைவர் இதில் தலையிட்டு அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும். ஆளுநர் ரவியின் செயலை கண்டிக்கிறேன். இது கண்டனத்துக்குரியது. 

தமிழக சட்டபேரவை குறித்து விமர்சனம் செய்வதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுதி இல்லை. உரிமை கிடையாது. விபரம் தெரியாமல் பேசி வருகிறார். ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் இருக்க ரவி தகுதியற்றவர். மோடி அரசு தூக்கி எறியப்படும். ஆளுநர் ரவியின் சட்டப்பேரவை செயல்பாடு தமிழகத்தின் கறுப்பு நாள்.

புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது. ரெஸ்டோபார், நடனநிகழ்வு போன்றவற்றால் கலாச்சாரம் சீரழிந்து மக்கள் அவதியறுகின்றனர். தொடர்ந்து போராடுவோம். நீதிமன்றமும் செல்வோம். அதேபோல் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. தடைச்செய்யப்பட்ட போதைப்பொருள், பள்ளி, பேருந்து நிலையம், கல்லூரி அருகே கிடைக்கிறது. இதில் ஒன்றை  சாப்பிட்டால் 2 மணி நேரம் போதையாக இருக்கும் சூழல் நிலவுகிறது. இதற்கு இளம் சிறார்கள் அடிமையாகின்றனர். போதைப்பொருளை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநாடு நடத்துகிறார். புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸில் போதைப்பொருள் கலாச்சாரத்தை அமித்ஷாவால் தடுக்க முடியவில்லை.

தற்போது செயல்படாத ஊழல் அரசாக புதுச்சேரி அரசு உள்ளது. பாஜகவுக்கு சென்றோர் நடுரோட்டில் நிற்கிறார்கள். அதில் ஓர் உதாரணம் ஏனாம் எம்எல்ஏ அசோக்.  ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரும் எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் நடத்துகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ளது. இது ஆட்சியாக தெரியவில்லை. கோமாளியெல்லாம் ஒன்றாக சேர்ந்துள்ளனர். பாஜகவுடன் சேர்ந்தால் நடுரோடுதான்” எனக் கூறினார்.