×

“இணையவழி குற்றங்கள் அதிகரிப்பு; சைபர் மோசடியில் சிக்கி ரூ.175 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனர்”

 

கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூபாய் 175 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்தை பறிகொடுத்து உள்ளதாக மாநில இணையதள குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் மாநில இணையதள குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இணையவழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தாண்டு செப்டம்பர் 18ஆம் தேதி வரை 62,767 சைபர் கிரைம் புகார்கள் வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக 486 குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 


கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் பொதுமக்கள் சைபர் மோசடியில் சிக்கி  175 கோடியே 19 லட்சத்து 55ஆயிரம் ரூபாய் பறிகொடுத்துள்ளனர். அதில் 33.45 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. 9.8 கோடி ரூபாய் மீட்டு கொடுக்கப்பட்டது. குறிப்பாக 30% புகார்கள் பைனான்ஸ் ஸ்கேம் மூலம் வந்துள்ளது. அதாவது பாஸ் ஸ்கேம், லோன் மோசடி ஆகியவை மூலம் இணையவழி மோசடியில் பணத்தை இழந்தோர் உடனடியாக 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக இழந்த பணம் மீட்டு தரப்படும். இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோர் 90% குற்றவாளிகள் வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் இருப்பதால் பணத்தை மீட்பதற்கும், குற்றவாளிகளை நெருங்குவதிலும் போலீசாருக்கு சிரமம் இருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். வெளிமாநிலங்களில் உள்ள சைபர் குற்றவாளிகளை எளிதாக பிடிப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள போலீசாரை ஒருங்கிணைக்கும் வகையில் வெப்போர்டல் ஒன்று துவங்க உள்ளோம். அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் அந்த மாநில போலீசார் உதவியுடன்  குற்றவாளிகளை எளிதாக நெருங்கலாம் ” என தெரிவித்தார்.