×

புதுச்சேரியில் பிஎப்ஐ அமைப்பிற்கு தடை - அரசாணை வெளியீடு

 

பிஎப்ஐ அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, புதுச்சேரியில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்,  பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்திருக்கிறது என்றும்,  பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிப்பது மற்றும்  ஆட்கள் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக  பல்வேறு புகார்கள் எழுந்தன.  இதனையடுத்து இது தொடர்பான புகாரின்பேரில், தமிழ்நாடு, கேரளா உள்பட  நாடு முழுவதும்  15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனையை மேற்கொண்டது.  இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த  மத்திய  உள்துறை அமைச்சகம்,  அதற்கு  தடை விதித்துள்ளது. அதாவது  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கும் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான இந்த தடை நடவடிக்கை  உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎப்ஐ அமைப்பை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.