×

#BREAKING ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவான தீர்ப்பு: அதிமுக தொண்டர்கள் உற்சாகம்!!

 

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கான தனித்தீர்மானம் நிறைவேற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று வழக்கை விசாரித்த நிலையில் அதிமுக பொதுக்குழு நடத்த தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டார். அத்துடன் தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார் . இதைத்தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு நள்ளிரவு விசாரித்தது.  

விடிய விடிய நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை . அதேசமயம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி இல்லை என்று கூறி தடை விதித்தனர்.  அத்துடன் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கலாம். ஆனால் அதனை அமல்படுத்தக் கூடாது,  என்று பழனிசாமி தரப்பு கோரிய நிலையில் அதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்நிலையில் பொதுக்குழுவில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை தன்வசப்படுத்திக் பழனிசாமிக்கு ஒற்றை தலைமை கனவானது கானல் நீராக மாறி உள்ளது.  தனித்தீர்மானத்திற்கு தடை விதிக்கப்பட்டதால்,  பொதுச் செயலாளர் கனவுக்கு  தற்போது முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.