×

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் : முடிந்த வழக்கை கையில் எடுத்துள்ளது உச்சநீதிமன்றம்..

 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 - 15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 3 வழக்குகளை  பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி.,  எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.  இந்த நிலையில் இந்த மோசடியில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்க பிரிவும் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும் படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  அதனை எதிர்த்து செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில்,  இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,  அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.  இதனை ஏற்ற நீதிபதிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்துசெய்தனர்.  

பின்னர் மறு விசாரணையின்போது,  பணத்தை திருப்பி கொடுத்து விட்டாதால்  வழக்கு தொடர்ந்தோர் புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  அதனை ஏற்றுக்கொண்ட  சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து முடித்து வைத்தது.  இந்த நிலையில்  போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம்  அதிரடியாக ரத்து செய்துள்ளது.  மேலும், இந்த மோசடி  வழக்கை தொடர்ந்து நடத்தவும் உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.