×

#BREAKING தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் செயல்படாது 

 

தமிழகத்தில் நாளை ஒரு நாள் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி - கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், ஜூலை 13-ஆம் தேதி காலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பள்ளி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில்  நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது. கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் 12,300 பள்ளி உட்பட 20 ஆயிரம் பள்ளிகள் நாளை ஒருநாள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.