×

”ஆளுநரை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என ஒருமையில் பேசிய ஆர்.எஸ்.பாரதி மூன்றாம் தர அரசியல்வாதி”

 

ஆர்.எஸ்.பாரதி மூன்றாம் தர அரசியல்வாதி என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதமும், அதனைத் தொடர்ந்து குடிமைப் பணி அதிகாரிகள் மத்தியில் பேசிய நிகழ்வாகட்டும், அதன் பிறகு நடைபெற்ற பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையை புறக்கணித்து, வேண்டுமென்றே "தமிழக ஆளுநர்" என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாகட்டும் அவரது அண்மைக்கால செயல்பாடுகளை தமிழ் கூறும் நல்லுலகம் வன்மையாகவே கண்டித்திருக்கிறது. 

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இணைப்புப்பாலமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டிய ஆளுநர் மாநிலத்தில் வெறுப்பு அரசியலை உருவாக்கி இது போன்ற சகுனித்தனமான செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் இருந்தது.

இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஆளுநரை வார்த்தைக்கு வார்த்தை அவன், இவன் என்று ஒருமையில் ஏக வசனம் பேசியதோடு, வன்முறையை தூண்டக் கூடிய வகையிலும், முகம் சுளிக்கக் கூடிய, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தி மூன்றாம் தர அரசியல்வாதியின் தரத்தை விட படுமோசமாக பேசியிருப்பதும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை கண்டிக்காமல் அமைதி காப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சியா..? என தெரியவில்லை.

ஏற்கனவே பல்வேறு விடயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களால் மூன்றாம் தர அரசியல்வாதியை விட படுமோசமாக நடந்து கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தற்போது தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்திலும் தரமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைப் பார்த்து சுட்டு விரல் நீட்டிப் பேசும் போது மடக்கப்பட்டுள்ள மீதி விரல்களில் மூன்று நம்மைத் தான் சுட்டுகிறது என்பதை ஆர்.எஸ்.பாரதி போன்றோர் உணர்ந்து, தவறு செய்வோர் அது எவராக இருந்தாலும் அந்த தவறை உணரச் செய்து அவர்கள் தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு தருகிற நாகரீக அரசியலை கையில் எடுப்பது தான் தமிழ்நாட்டில் சரியான அரசியலாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும்.

அந்த வகையில் ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" (குறள்-314) என்கிற குறளுக்கேற்ப ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியினரும், அதிகாரவர்க்கமும் செயல்படுவது தான் சரியானதாக இருக்கும் என்பதால் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தனது தரம் தாழ்ந்த போக்கினை இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.