×

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு வழக்கு..  அமைச்சர்கள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு..

 

பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரிய  வழக்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குடும்ப  அட்டைதாரர்களுக்கு  1, 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக வழங்கப்படும்  அரிசி, வெல்லம், ஏலக்காய், ரொக்கப்பணம் ஆகியவை இல்லாமல் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.  அதில், பச்சரிசி, வெல்லம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கோதுமை மாவு, ரவை என  21 பொருட்கள் இடம்பெற்றிருந்தன.  இந்த பொருட்கள் விநியோக்கிக்கும் போதே வெல்லம் உருகிப்போய் இருப்பதாகவும், மிளகில் கலப்படம் இருப்பதாகவும்,  பல்லி கிடந்ததாகவும் எக்கச்சக்க புகார்கள் எழுந்தன.  

இந்நிலையில்  பொங்கல் பரிசுத் தொகுப்பில்  பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்,  தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும்  திருவள்ளுவரை சேர்ந்த ஜெயக்கோபி  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி  அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர் மனுதாரராக உள்ள அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிய போதும், அவர்கள்  இருவரும் இதுவரை பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோர் பதில் மனுதாக்கல்  செய்ய உத்திரவிட்ட நீதிபதி,   விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.