×

இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது- பொள்ளாச்சி ஜெயராமன்

 

கொப்பரை கொள்முதலை மீண்டும் துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரணிடம் மனு அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாட்சி ஜெயராமன், “கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரம் தென்னை விவசாயம் சார்ந்த பகுதி, தேங்காய் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் தற்போது வேதனையில் உள்ளனர். இதுவரை அரசு கொப்பரையை கிலோ ரூ.105.95 என கொள்முதல் செய்து வந்தது, அதையும் தற்போது நிறுத்தி விட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் கொப்பரை கொள்முதலை துவங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொண்டோம். தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு பத்து வேலைகள் என தமிழக முதல்வர் ஒதுக்கினார். அதற்காக நாங்கள் பரிந்துரை செய்த வேலைகளை செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால் அதற்கு பதிலாக வேறு பணிகள் குறித்து ஆட்சியர் கொடுத்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி, ஒப்பந்தம் கோரப்பட்ட பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின் பொள்ளாச்சி - கோவை மாற்றுப்பாதை நிறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிக்கம்பட்டி கிராமத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட வேலைகளை அரசியல் நோக்கம் இல்லாமல் செய்து தரவேண்டும். 

இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே டேன் டீ நிறுவனத்தை நல்ல முறையில் பாதுகாத்து மக்களுக்கு உரிய ஊதியம் கொடுத்து, இருப்பிடம் கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிதரவேண்டும் என்பதே அதிமுகவின் எடப்பாடியாரின் திடமான கோரிக்கை” என மழுப்பலான பதிலளித்தார்.