×

திருமணமான 3 மாதத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

 

விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து 2019-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரமுத்துவிற்கு திருமணம் நடைபெற்றது. இவர் அவரது மனைவியுடன் திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். 

ஆடி மாதம் பிறந்ததையடுத்து வீரமுத்து அவரது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மாலை வீரமுத்துவின் மனைவி அவருக்கு தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். செல்போனை எடுத்து வீரமுத்து பேசாததால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக வீரமுத்துவின் நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வீரமுத்துவின் நண்பர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீரமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வீரமுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.