×

காவலர்களுக்கு "காவல் பதக்கம்".. சிறை மரணங்களே இல்லாத நிலை வேண்டும் -  முதல்வர் ஸ்டாலின் உரை..

 

தமிழகத்தில் இந்த ஆண்டு  டிஜிபி முதல் காவலர் வரை ‘காவலர் பதக்கங்கள்’ வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.   மேலுல் சிறை மரணங்களே இல்லாத நிலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

தமிழ்நாடு காவல்துறைக்கு  குடியரசுத் தலைவரின் சிறப்புக் கொடி வழங்கும் விழா,  சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடைபெற்ற இந்த விழாவில்  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   இந்த விழாவில்  ‘குடியரசு தலைவர் கொடியை’ துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு  தமிழ்நாடு காவல் துறைக்கு வழங்கினார்.   குடியரசு தலைவர் கொடியை தமிழக காவல்துறை முதல்வர் பெற்றுக்கொண்டு , டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினார்.  இந்த விழாவில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இந்த விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதி சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தனக்கு தானெ சல்யூட் அடித்துக் கொள்ளக்கூடிய சிறப்பு இது;    இதுகாவல்துறைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே வரலாற்று சிறப்பு மிக்க  பெருமையாகும். உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல்துறை ஆற்றிய சேவைக்கு இது அங்கீகாரம். பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக காவல்துறை விளங்குகிறது. அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை தமிழக காவல்துறை குவித்து வருகிறது. காவல்துறை மீது மக்கள் நன்மதிப்பை வைத்துள்ளார்கள்.

தமிழ்நாடு காவல்துறையில் ஒரு டிஜிபி 2  ஏடிஜிபி, 14 ஐஜி, 20,000 காவலர்கள் பெண்களாக உள்ளனர்.  மக்களை காப்பதே தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் பணி.  தமிழக காவல்துறை குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல் குற்றமே இல்லாத துறையாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், தமிழ்நாட்டில் சிறை மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். போக்சோ வழக்குகளில் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கவலையின்றி பணியாற்றும் சூழலை அமைத்துத்தர இந்த அரசு தயாராக இருக்கிறது” என்றார்.  மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு  டிஜிபி முதல் காவலர் வரை ‘காவலர் பதக்கங்கள்’ வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.