×

சரிவர இயக்கப்படாத அரசு பேருந்துகள்.. அல்லல்பட்ட மாணவர்கள் - வீதிக்கு வந்த பெற்றோர்கள்!

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ராஜன் நகர் கஸ்தூரிபா அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு கல்வி பயில அரசுப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இச்சூழலில் இந்த இரு கிராமங்கள் வழியாக பள்ளி நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மேற்கூறிய இரு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் 3 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பட்டரமங்கலத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்ற மாணவர் பள்ளி செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறி பவானிசாகர் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அதன்பின் அவசர அவசரமாக தொட்டம்பாளையம் அரசு பள்ளி செல்வதற்காக மற்றொரு அரசுப் பேருந்தில் ஏற முயன்றுள்ளார். ஆனால் ஓட்டுநர் அதை கவனிக்காமல் போக, மாணவன் படியிலிருந்து தவறி விழுந்து  தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த இரு கிராம மக்களும் திரண்டு வந்து பள்ளி நேரத்திற்கு இயக்கப்படாமல் உள்ள அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இதுதொடர்பாக தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர் மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,மாணவன் பேருந்திலிருந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.