×

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம்!!

 

முகக்கவசம் அணியாவிட்டால் ₹500 அபராதம் விதிக்கப்படும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் மீண்டும் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர தொடங்கி விட்டது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியா மட்டுமல்ல சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது தமிழகத்தை பொறுத்தவரை தொற்று எண்ணிக்கை 21 வரை குறைந்து தற்போது 39 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் நிறுத்தவைக்கப்பட்டிருந்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  வரும் மே 8ஆம் தேதி மீண்டும் நடத்தப்படவுள்ளது. 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என்றும்  தடுப்பூசி செலுத்தாதவர்களை தனித்தனியே சந்தித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைவரும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த உள்ளோம். பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாவிட்டால் ₹500 அபராதம் விதிக்கப்படும்.  இதனால் அக்கறையுடன் மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை எடுத்து கொள்ளவேண்டும்.  கொரோனா தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.