×

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி செயல்பட தடை கோரி வழக்கு

 

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் ஶ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அந்த பொதுக்குழுவை புறக்கணித்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றி உள்ளே நுழைந்தார். அப்போது ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி, மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அன்று மாலையே தென் சென்னை வருவாய் கோட்டசியர்  சாய் வர்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.மேலும் அதிமுகவில் இருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதே கூட்டத்தில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். 


இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் என திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், பதவி நீக்கம் மற்றும் நியமனம் செய்வதற்கும் தடைவிதிக்க வேண்டும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் இரட்டை தலைமையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆகஸ்ட் 16க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, செப்டம்பர் 1ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.