×

கருமுட்டை விற்பனை விவகாரம் : ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம் ..

 

கருமுட்டை விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

 

 ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வரும் நிலையில், தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.  இதனை எதிர்த்து  அந்த தனியார் மருத்துவமனை சார்பில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிமீறல் இருப்பதை உறுதி செய்தல் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை இடைக்காலமாக ரத்து  செய்வதற்கான காரணங்கள்  தெரிவிக்கப்பட வில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

பின்னர் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து  தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தபோது,  மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்தானர்.  இதனால் தொடர்ந்து மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைத்ததும் தொடர்கிறது.  இந்தநிலையில், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து  ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.