×

கருமுட்டை விற்பனை விவகாரம் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு!!

 

ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் பெரும் பூதாகரமாகியுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தாய் ,வளர்ப்பு தந்தை ,இடைத்தரகர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த நபர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 5  மருத்துவமனைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால்  சம்பந்தப்பட்ட  மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே கருமுட்டை முறைகேடு புகாரில் சிக்கிய மருத்துவமனைக்கு தமிழக சுகாதாரத்துறை சமீபத்தில் சீல் வைத்தது.  இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கருமுட்டை முறைகேடு புகாரில் சிக்கிய மருத்துவமனைகளுக்கு வைக்கப்பட்ட சீலை  அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றவும் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரித்து  12 வாரங்களில் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில், சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருமுட்டை விற்பனை வழக்கில் மருத்துவமனைக்கு சீல் வைத்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கை செல்லும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.