×

#BREAKING  1 - 12ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த உத்தரவு!

 

 1 முதல் 12ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரிவர நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.  இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.  அதேபோல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. 

இதன் பின்னர் கடந்த மே 13ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் நேற்று மீண்டும் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்பட்டது.  மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் ,சீருடைகள் ,நோட்டுகள் உள்ளிட்டவை பள்ளிகள் திறக்கப்படும் முதல்நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்த நிலையில்,   20 நாட்களுக்குள் அனைத்தும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பாடங்கள் குறைத்து  நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் முழு பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.  ஆனால் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.