×

"கருமுட்டை தானத்திற்கு சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தித்துள்ளனர்" - அமைச்சர் விளக்கம்!
 

 

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.


ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் பெரும் பூதாகரமாகியுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தாய் ,வளர்ப்பு தந்தை ,இடைத்தரகர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த நபர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  "ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள்; சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்கவில்லை; இந்த  விவகாரம் அதிர்ச்சியாக இருக்கிறது. சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது; விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை; அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலியாக உள்ளது. போலியான ஆதார் அட்டை  என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது . தகுந்த கல்வி தகுதி இல்லாதவர் ஆலோசகராக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. கருமுட்டை தானம் பெற போலியான கணவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.கருமுட்டை விவகாரத்தில், 6 மருத்துவமனைகள் ஐசிஎம்ஆர் விதிகளை மீறி செயல்பட்டுள்ளன. ஈரோடு கருமுட்டை விற்பனை தொடர்பாக தனியார் மருத்துவமனைகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கருமுட்டை தானத்திற்கு சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தித்துள்ளனர்.கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்  4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.