×

ஆசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு 

 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் சம்பள பட்டியலை கருவூலத்தில் அல்லது சம்பள கணக்கு அலுவலகத்தில் உடனடியாக சமர்பித்து ஊதியம் பெற்று வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-  பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 42 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை மாவட்ட கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்கள் விவரங்கள் சார்ந்த புதிய மாவட்ட கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊதியம் பெற்று வழங்கும் வகையில் இணையத்தில் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. 

எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் (இடைநிலை) தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாக சேர்ந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் சம்பள பட்டியலை கருவூலத்தில் அல்லது சம்பள கணக்கு அலுவலகத்தில் உடனடியாக சமர்பித்து ஊதியம் பெற்று வழங்க வேண்டும். இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சார்பாக 30.9.2022க்கு முன்னர் பட்டியல் ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.