×

ஆன்லைன் ரம்மி - தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

 

 தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

 

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து விட்டது.  இதனால் தமிழகத்தில் ஆன்லைன்  சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் கூட  தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த முத்தானூர் கிராமத்தில் பிரபு என்ற இளைஞர் ஆன்லைனில் ரம்மி ஆடி 15 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27ஆவது தற்கொலை இதுவாகும். இதனால் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்  என்பது பலரின் கோரிக்கை.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து  தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 12மணியளவில் தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள்  தெரிவிக்கின்றன.