×

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

 

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் – இந்திரா நகர் இடையில் பக்கிங்ஹாம் கால்வாய் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி கஸ்தூரிபாய் – இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு  பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நிலுவையில் இருந்த இந்த வழக்கை இறுதியாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்தது. வழக்கில் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2009 ம் ஆண்டு பக்கிங்ஹாம் கால்வாய் தேசிய உள்நாட்டு நீர்வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் நீர்நிலைகளின் அருகில் இருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க ஆயிரத்து 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு காலத்தில் நீர்வழிப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயின் தற்போதைய நிலைக்கு மாநில அரசு தான் காரணம் என்றும்,தற்போது நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை ஆறு மாதங்களில் வரையறுக்க வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என உத்தரவிட்டனர்.

எல்லையை வரையறுத்த பின், கால்வாயில் அமைந்துள்ள உயர்மட்ட ரயில் தண்டவாளங்களுக்கான தூண்கள், பாலங்களின் தூண்கள் தவிர, மற்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் ஓராண்டில் அகற்ற வேண்டும் எனவும், மேற்கொண்டு எந்த கால அவகாசமும் வழங்கப்படமாட்டாது எனவும்  ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் முளைக்காதபடி நடவடிககைகள் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

கால்வாய் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை வேறு எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், கால்வாயை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் எதையும் வரன்முறைப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.