×

புரட்சி தலைமகன் எடப்பாடி பழனிசாமி - ஓ.எஸ்.மணியன் புகழாரம்

 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எடப்பாடி பழனிசாமியை புரட்சி தலைமகன் என புகழாரம் சூட்டினார். 

அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது.  இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நம்மை எல்லாம் வளர்த்து ஆளாக்கி உருவாக்கிய புரட்சித் தலைவரையும், அம்மாவையும் வணங்குகிறேன். இந்த பொதுக்குழு சீர்மிகு பொதுக்குழு, சிறப்பு மிகு பொதுக்குழு. வரலாற்றில் நிரந்தரமாக பேசப்படும் சிறப்புமிக்க பொதுக்குழு. கழக வரலாற்றில் தலைவர்கள் பொதுச்செயலாளர்கள் ஆனார்கள். தூய தொண்டன், தொண்டர்களின் குரலாக இடைக்கால பொதுச்செயலாளர் அவர்கள் விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் அண்ணன் புரட்சித் தலைமகன் எடப்பாடியாரை வணங்குகிறேன்.  அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம். சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம். இவ்வாறு கூறினார். எம்.ஜி.ஆர் புரட்சி தலைவர் என்று அழைக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து ஜெயலலிதா புரட்சி தலைவி என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது புரட்சி தலைமகன் என எடப்பாடி பழனிசாமி அழைக்கபடுவது குறிப்பிடதக்கது.