×

இளம் வயதில் காளையை அடக்கினேன் - ஓபிஎஸ்

 

இளம்வயதில் காளையை அடக்கியதாக எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தெரிவித்ததால் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் பதிவு துறை மானியக்கோரியில் பேசிய  அதிமுக உறுப்பினர் சேகர், பேச்சை தொடக்கும் போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை "ஜல்லிக்கட்டு நாயகன்" என்று புகழாரம் சூட்டினார். அப்போது குறிக்கிட்டு பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாகவும், அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளை அடக்கினார்  என்றும் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தாம் இளம்வயது காளையாக இருந்தபோது பெரியகுளத்தில் பல காளைகளை அடக்கியதாகவும், தடை விதிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை "ஜல் ஜல்" என்று நடத்தி காட்டியதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசும் போது, ஜல்லிக்கட்டு போட்டியை திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு தடை செய்யவில்லை என்றும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றம் சென்றதால், நீதிமன்றம் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்ததாக தெரிவித்தார்.  மீண்டும் போட்டிகள் நடைபெற அதிமுக அரசு காரணமல்ல என்றும், மக்கள் போராட்டத்தால் மீண்டும் போட்டிகள் சாத்தியமானதாகவும் தெரிவித்தார்.