×

“கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக” - தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

 

கொரோனா பரவல் அதிகரித்துப் வருவதைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, நோய் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “  கடந்த இரண்டு மாதங்களாக   கொரோனா எனும் பெயரை மறந்திருந்த நிலையில், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரசால் தமிழ்நாட்டில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருவதும் மீண்டும் ஒருவித அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 01 அன்று 3,712 என்றிருந்த கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை ஜூன் 8  அன்று 7,240 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஜூன் 01 அன்று 139  ஆக இருந்த பாதிப்பு  08 ம் தேதி அன்று 185 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 152 நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பத்து மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு மாதங்களாக உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும், ஏப்ரல் மாதத்தில் 20-லிருந்து 30-ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது 185 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன்  சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில்  BA4 மற்றும் BA5வால்  12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது 4வது அலை துவங்கியதற்கான அறிகுறி என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டில்  முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே,   முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் அதிமுக சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.