×

"வேதனையில் தமிழக மீனவர்கள்" - அதிர்ச்சியில் அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்!

 

ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் தேவாலய பெருவிழாவின் போது இந்திய மக்களும், இலங்கை மக்களும் இணைந்து திருவிழா கொண்டாடுவது வழக்கமானது. இது இந்திய இலங்கை நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமைகிறது. ஆனால் நடப்பாண்டில் நடைபெற இருக்கின்ற கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் சோகத்தில் இருக்கின்றனர். 

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா என்பது தமிழகம்-ஈழத் தமிழர்கள் இடையேயான கலாச்சார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா மார்ச் 11, 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவைக் காரணம் காட்டி இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "கச்சத்தீவு திருவிழாவில் தமிழர்களை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவர்களும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்களையும் அனுமதிக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.