×

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  வழக்கை விசாரித்து நீதிபதிகள்  ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடியும் வரை  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையின் போது,  எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிபதிகள் அமர்வு  உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், நீதிபதிகள் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.