×

விரைவில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி அவரது ஆதாரவாளர்களான வைத்திலிங்கம், கோவை செல்வராஜ், ரவிந்திரநாத் உள்ளிட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்காக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீசெல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதமகாமவே அமைந்தது. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அவ்வபோது தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்ந்து கட்சியை பலம் அடைய செய்ய வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கே கட்சியில் இடம் கிடையாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். 

இருந்த போதிலும், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் நியமனம்  நிறைவடைந்த பின், மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் அதன் பின்னர் அதிமுகவின் பொதுக்குழுவும் நடைபெறும் என்றார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக சந்திப்பேன் எனவும் கூறினார்.