×

கொட்டிய மழை- காணாமல் போன வெள்ளம்; வேளச்சேரி மக்கள் நிம்மதி!

 

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி 31 ந் தேதி மாலை முதல் சென்னை, ஆவடி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி, செங்குன்றம் போன்ற பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

கடந்த வருடம் பெய்த மழையில் சென்னை சாலைகளில் கடும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த வருடம் மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து சென்னையில் வெள்ள நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கான பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற பல இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட இதற்காக சென்னை மற்றும் புறநகரில் அனைத்து சாலைகளிலும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர்.

31 ந் தேதி இரவு சென்னையில் 10 செமீ மழை பெய்தது. பொதுவாக இது போன்ற பேரிடர் காலத்தில் இந்த அளவிற்கு மழை பெய்யும்போது  சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை தண்ணீர் தேங்கி வந்த வேளச்சேரி கே.கே நகர்,அசோக் நகர்,மேற்கு மாம்பலம், டி. நகர் ஆகிய பகுதிகளில் இப்போது முற்றிலும் மழை நீர் வடிந்துள்ளது.

சென்னையின் முக்கிய15 சப்வேகளில் வாகனங்கள் செல்லாத வகையில் தண்ணீர் கடந்த வருடங்களில் தேங்கியது. ஆனால் இந்த முறை தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கவில்லை. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக ஒருநாள் மழைக்கே குளம்போல் தண்ணீர் தேங்கும் விஜயநகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பெய்யும் மழைக்கு, தரைத்தளத்தில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழும் சூழல் உருவாகும் நிலையில், இந்த முறை மழைநீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.