×

 தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் - அதிமுக அலுவலகத்தில் அறிவிப்பு பலகை!!

 

 அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரும்  வரவேண்டாம் என்று  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி ஈபிஎஸ்  மற்றும் ஓபிஎஸ் இரு தரப்புக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் மேற்கொண்டு  அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அதிமுக அலுவலக சீலை அகற்ற உத்தரவிட்டதுடன், எடப்பாடி பழனிசாமிடம் தலைமை அலுவலக சாவியை வழங்கவும் அறிவுறுத்தியது. அதேசமயம் தொண்டர்கள், நிர்வாகிகள் ஒருமாத காலத்திற்கு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர கூடாது என்றும் கூறியது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அகற்றி,  எடப்பாடி பழனிசாமியின் மேனேஜரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.  இந்நிலையில் தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  

அதில் நீதிமன்ற ஆணைப்படி கழக தொண்டர்களும், ஆதரவாளர்களும் 20ம் தேதி வரை தலைமை கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளது.