×

வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றமில்லை - லியோனி தகவல்

 

வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றமில்லை என தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்  அல்லது தமிழ்நாடு பாடநூல் கழகம் என்பது தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடபுத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் ஆகும். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பாடநூல்களை அச்சடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வழங்கி வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசுதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையிலும் வழங்கப்படுகின்றன. 


 
இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் மாற்றமில்லை என தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழக தலைவர் லியோனி தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என்று மாற்றுதல், கருணாநிதியின் செம்மொழி பாடலை சேர்த்தல், ஆளுநரின் அதிகாரங்கள் பற்றிய குறிப்பில் திருத்தல் செய்தல் போன்ற மாற்றங்கள் எதுவும் வரும் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களில் கிடையாது எனவும், வரும் 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுவிட்டன எனவும் தெரிவித்துள்ளார். 

2023-2024-ம் கல்வியாண்டுக்கான புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தகங்களில் திருத்தம் இருப்பின் அது, 2023-2024-ம் கல்வியாண்டில் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.