×

ஜெ.வின் உயிலை வெளியிடக்கோரி அவரது நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டுமென அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர்  பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் வில்லாக்களை ஏற்படுத்தும்படி ஜெயலலிதா கூறியதால், 125 வில்லாக்களுக்கு முன் பணமாக  30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்துள்ளேன், தன் பெயரில் சில சொத்துக்களை ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக சசிகலா கூறியுள்ளார் ஆனால் தற்போது சசிகலா சந்திக்க மறுக்கிறார். எனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டுமென அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா என பதிலளிக்க தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர்  ஆகியோருக்கு உத்தரவிட்டு,  விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.