×

நாகை தேர் சப்பரத்தில் சிக்கி ஒருவர் பலி - நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
 

 

தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு  முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

நாகை அருகே உத்திராபதீஸ்வரர்  ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் தேர் சக்கரத்தில் தொழிலாளர் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செங்காட்டாங்குடி  உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நள்ளிரவு நடைபெற்றது.  தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் தீப ராஜன் என்பவர் குடும்பம் காலங்காலமாக ஈடுபட்டுவருகிறது.  தேர் தெற்கு வீதியில்  திரும்பியபோது 10 அடி தூரத்தில் சக்கரத்தில் சிக்கி முட்டுக்கட்டை போடும் தொழிலாளியான தீப ராஜன், தேரின் சக்கரத்தில் சிக்கி  படுகாயமடைந்தார்.  இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் தேரின் ராட்சத சக்கரம் அவரது வயிற்றில் ஏறியதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாகை திருச்செங்காட்டாங்குடி உத்திராபதீஸ்வரர் ஆலய தேர்த் திருவிழாவில் தேர் சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை தேர் விபத்தில் சிக்கி 11 பேர் பலியான நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நாகையில் நடந்துள்ளது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.