×

 முத்துக்குமரன் உடலில் பல இடங்களில் காயம்.. குடும்பத்தினர் வைத்த முக்கிய கோரிக்கை.. 

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் தனியார் முகவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3ம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். குவைத்தில்  முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கச் சொல்லியுள்ளனர்.  இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான முத்துக்குமரன்  தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டதாக கூறியிருக்கிறார்.  பின்னர்  இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7ம் தேதி புதன்கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

 அவர்களது  குடும்பத்தினருக்கு செய்தி  கிடைத்துள்ளது. முத்துக்குமரன்  வேலை  செய்த குவைத் நாட்டை  சேர்ந்தவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  முத்துக்குமரனின் குடும்பத்தினர் அவரது உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில்  உயிரிழந்த முத்துகுமரனின் உடல் இன்று   திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

முத்துக்குமாரின் உடலைப் பெற்றுக்கொள்ள  அவரது  உறவினர்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சி சர்வதேச விமானம் நிலையத்துக்கு வந்தனர். இந்நிலையில்  முத்துக்குமரனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது.  அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  முத்துக்குமரனின் பிள்ளைகளை கருத்தில்கொண்டு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும்,  அவரது  மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.