×

மதம், ஜாதிவெறியை தூண்டும் பாஜகவை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்- முத்தரசன்

 

பாஜகவை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என கோபியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் தொடங்கி முதல் தமிழக செயலாளராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கோபியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சி.சுப்பிரமணியத்தின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இ.கம்யூ. மாநில செயலாளர் ரா.முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “நமது நாடு மதசார்பின்மை கொள்கையை பின்பற்றுகிற நாடாக உள்ளது.நமது அரசியலமைப்பு சட்டத்தில் மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்தகைய மகத்துவமான கொள்கையை உலகமே போற்றுகிறது. இந்தியாவில் பல்வேறு மதங்களும், 4 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளது.பல மொழிகளை பேசக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். மொழியில் வேறுபாடு, மதத்தில் வேறுபாடு, ஜாதி வேறுபாடு, உணவில் வேறுபாடு, உடையில் வேறுபாடு, என பல்வேறு விதமான வேறுபாடுகள் நிரம்பி இருக்கிற இந்த தேசத்தில் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட மகத்தான தேசமாக இருக்கிறது என உலகமே போற்றி புகழ்ந்து கொண்டிருக்கிற சூழலில் இந்த மகத்தான கொள்கைக்கு எதிராக, மக்களின் ஒற்றுமைக்கு எதிராக இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சி நடத்தக்கூடிய பாஜ அரசு, மதவெறி, ஜாதி வெறி, மொழி வெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்துகிற மிக மோசமான மிக பிற்போக்குத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது.

இது மட்டுமல்லாமல் விலைவாசி உயர்வு, வேலையின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக  கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிற மக்களை ஒன்று சேர்ந்து தங்களுக்கு எதிராக போராடுவார்கள் என்கிற காரணத்தினால் மதரீதியாக கட்சியின் மத்தியில் ஒரு கலகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, அதன் ஒரு பகுதியாகத்தான் பா.ஜ சேர்ந்த மூத்த தலைவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுப்பிரமணியசுவாமி,அரசியலைப்புச் சட்டத்தில் இருக்கிற மதச்சார்பின்மை, சோசலிசம் என்கிற இரு வார்த்தைகளும் அந்த உயர்ந்த சொற்களும் நீக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை போட்டிருக்கிறார்.

அந்த வழக்கிற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக விஸ்வம், இந்த வழக்கு  நம்முடைய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசியல் பிரச்சாரத்திற்காக இந்த வழக்கை சுப்பிரமணியசாமி போட்டுள்ளார் என்றும், தள்ளுபடி செய்வது மட்டும் அல்ல இந்த வழக்கிற்கான செலவு தொகையையும் வசூல் செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்.

நாங்கள் கேட்பது சுப்பிரமணியசாமி பாஜ வின் அகில இந்திய  தலைவர்களில் ஒருவர். அவர் தன்னிச்சையாக இந்த வழக்கை போட்டு இருக்கிறாரா? அல்லது பா.ஜ ஒப்பதலோடு இந்த வழக்கை போட்டுள்ளரா? அவர் தன்னிச்சையாக வழக்கு தொடுத்து இருந்தால் அவர் மீது பாஜ கட்சி நடவடிக்கை எடுத்து அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அது மட்டுமல்ல சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும். அல்லது பாஜ ஒப்புதலோடு வழக்கு தொடுத்துள்ளார் என்றால் தேர்தல் ஆணையம் பா.ஜ.வை  தடை செய்ய வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் போது, மதசார்பின்மை, சோசலிசம், ஜனநாயகம் இந்த மூன்றையும் ஏற்றுக்கொண்டு தான் கட்சியாக பதிவு செய்கிறார்கள்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஒரு கட்சி செயல்படுகிறது என்றால் அந்த கட்சியை நாட்டில் அனுமதிக்க முடியாது. அனுமதிக்க கூடாது. தேர்தல் ஆணையம் சமீபத்தில்  பல்வேறு அரசியல் கட்சிகள் செயல்படவில்லை என்று நீக்கி இருக்கிறது. அவைகளை விட இது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீரழிக்க கூடிய நடவடிக்கை என்பதால், தேர்தல் ஆணையம் இந்த பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விலைவாசி பன்மடங்கு உயர்ந்து, அத்தியாவசிய பண்டங்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாக இருக்கிறார்கள். வேலையில்லாத பிரச்சனை, வருமானம் அதிகரிக்காத பிரச்சனை, வருமானம் இருந்த நிலையில் தான் இருக்கிறது. இப்படியான சுமையாக இருக்கக்கூடிய சூழலில் மாநில அரசு,மத்திய அரசின் நிர்ப்பந்தங்கள், நெருக்கடிக்கு ஆளாகி,  மானியங்களை கொடுக்க மாட்டோம் என்று  ஒன்றிய அரசு கூறிய காரணத்தால்  மின்கட்டணத்தை உயர்த்திருக்கிறார்கள்.  சலுகைகளும் இருந்தாலும் மின்கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். அதை மாநில அரசு குறிப்பாக மாநில முதலமைச்சர் இதை பரிசீலித்து, மின் கட்டணத்தை  குறைப்பதற்கு உள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். வகுப்புவாத  சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. ஆதரிக்கிற கட்சிகள் எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் அவைகளுக்கு இடமில்லை” என்றார்