×

சேலத்தில் வறுமையின் காரணமாக குழந்தையை விற்க முயற்சித்த தாய்

 

சேலத்தில் சட்ட விரோதமாக பச்சிளம் குழந்தையை  விற்க முயன்ற  வழக்கில் திருச்செங்கோட்டை சேர்ந்த தாய் கஸ்தூரி  மற்றும் அவரது சகோதரியை அழைத்து வந்து சேலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சட்டம் விரோதமாக பச்சிளம் பெண் குழந்தை ஒன்றை  இடைத்தரகர்கள் விற்பனை செய்ய முயன்ற போது தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து , குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, இடைத்தரகர்களான ஈரோட்டைச் சேர்ந்த லதா,  திருச்செங்கோட்டை சேர்ந்த வளர்மதி மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், சட்ட விரோத  கருமுட்டை  விற்பனை விவகாரத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் லதா வளர்மதி மற்றும் மதியழகன் ஆகிய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இன்று திருச்செங்கோட்டை சேர்ந்த பச்சிளம் குழந்தையின்  தாய் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரையும் சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு  அழைத்து வந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக போலீசார்  விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வறுமையின் காரணமாக குழந்தையை விற்க முயற்சித்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இடைத்தரகர்கள் ஆசைவார்த்தை கூறி, குழந்தையை விற்பனைக்காக வாங்கி சென்றதாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் தாய் கஸ்தூரி,  தனது குழந்தையை தன்னிடமே  திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறையினரிடம்  வேண்டுகோள் விடுத்தார். 

அப்போது, குழந்தையை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றால் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வரவேண்டும் என்றும்  குழந்தையை இனி  பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன் என்ற உத்தரவாதம் வழங்கியப் பிறகு தான்,  குழந்தை ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் தற்போது  பாதுகாப்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைதான குழந்தை விற்பனை இடைத்தரகர்கள் லதா வளர்மதி மற்றும் மதியழகன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும், வேறு ஏதாவது குழந்தைகளை   விற்பனை செய்துள்ளனரா?  என்றும் கருமுட்டை விவகாரத்தில்  வேறு பெண்கள்  யாரையாவது  சட்ட விரோத விற்பனைக்கு கட்டாயப் படுத்தியுள்ளனரா ? என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.