×

 மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் - நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 

 


அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்  ரூ.1000 வழங்கும் திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ,  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்டது.     அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000  ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.  இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்  வெளியிடப்பட்டு,  இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன.

 இத்திட்டத்தின் கீழ் பயன்பெற  பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.  மேலும்,  இத்திட்டத்திற்காக  ரூ. 698 கோடி  ஒதுக்கப்பட்டது.   மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.  உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க , அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் தோறும் பணம் செலுத்தப்படும்.

இந்நிலையில் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை புதுமைப்பெண் திட்டம் என தமிழக அரசு பெயரிடப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தை  ஆசிரியர் தினமான நாளை   5ஆம் தேதி  வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில்  டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.