×

இருளில் மூழ்கிய மயிலாடுதுறை! அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன விளக்கம்

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடந்த இரண்டு நாட்களில் 44 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சீர்காழி,கொள்ளிடம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. வீடுகள், விளைநிலங்கள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் இந்த பாதிப்புகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  மழையால் பாதித்த மணிகிராமம்,எடமணல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடனடி நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார்.

தொடர்ந்து மின்சார பணி நடைபெறும் இடங்களில் மின் ஊழியர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து எடமணல் துணை மின் நிலையத்தில் அமைச்சர் மெய்ய நாதனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்துள்ளது.  அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 43 செ.மீ மழை பதிவாகி உள்ளது.  மழை அதிகமாக பெய்த காரணத்தினால் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் உடனடியாக சரி செய்து சீரான மின்விநியோகம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு முகாமிட்டு கடந்த இரண்டு நாட்களாக நிவாரண மீட்புப்பணியில் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.10 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.  

குறிப்பாக எடமணல் துணை மின்நிலையத்தில் மிகஅதிக அளவில் சேதமடைந்துள்ளன.  அதனை சீர்செய்யும் பணி மின்வாரிய ஊழியர்கள் மூலம் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.  2260 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன.  அதில் 1984 மின்மாற்றிகள் சரிசெய்யப்பட்டு, சீரான மின்விநியோகம் வழங்கப்படுகிறது. 370 மின்மாற்றிகள் மிகவும் சேதமடைந்துள்ளன.  அதில் 163 மின்மாற்றிகள் மழைநீரில் சூழ்ந்துள்ளன.  200 மின்கம்பங்கள் உடைந்துள்ளன.  

மின்வாரிய ஊழியர் மற்றும் பணியாளர்கள் மூலம் போர்கால அடிப்படையில் பணியாற்றி 120 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.  மீதமுள்ள 80 மின்மாற்றிகள் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்.  இன்று இரவுக்குள் அனைத்து பகுதிகளிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும்.  திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 354 மின்வாரிய பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள், மின்கம்பிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மின்வாரிய ஊழியர்கள் துரிதமாகவும், சிறப்பான முறையிலும் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய ஊழியர்கள் மூலம் 3000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 472 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிக்கும் இன்று இரவுக்குள் சீரான மின்விநியோகம் தரப்படும்.  மின்வாரிய ஊழியர்களுக்கு பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்டு பணிகள் செய்து வருகின்றனர்.  மின்வாரிய ஊழியர்கள் மிக கடுமையான உழைப்பை செய்து வருகிறார்கள்.  ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், அரசு இயந்திரமும் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றனர்” எனக் கூறினார்.