×

மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் கொண்டு வரப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

 

சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட செட்டி தெரு பகுதியில் வளைய சுற்றுதர அமைப்பு (RMU) திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், செந்தில் பாலாஜி, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர். ரூ.20கோடி மதிப்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 140 இடங்களில் மாற்றப்பட்ட வளைய சுற்றுதர அமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  “மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். புதிதாக பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. ஸ்மார்ட் மீட்டர் பணிகள் முடிந்ததும் மாதாந்திர கட்டணம் நடைமுறைக்கு வரும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் போது நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். அது முற்றிலும் தவறு அவ்வாறு வசூலிக்கப்பட மாட்டாது. இது போன்ற தவறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “சைதாப்பேட்டையில் 4.50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.230 கோடி செலவில் கட்டப்படவுள்ள பன்னோக்கு மருத்துவமனைக்கு ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பஜார் சாலையில் ரூ.50 கோடி மதிப்பில் புதிய மருத்துவமனை அமைய உள்ளது” எனக் கூறினார்.