×

ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சிப்பவர்களுக்கு முதல்வர் செயல்களால் பதிலடி- சேகர்பாபு

 

ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சிப்பவர்களுக்கு முதலமைச்சர் தனது செயல்பாடுகள் மூலம் பதிலளித்து வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில்,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழர் திருநாளை முன்னிட்டு கோயிலில் பணியாற்றும், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். அதனை தொடர்ந்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உண்டியல் திறப்பு மற்றும் தொகை கணக்கீடு செய்யும் பணிகளை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காணும் வகையில் வலைதளத்தில் நேரலை செய்யும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் 18,000 பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் வடபழனி ஆண்டவர் கோயில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் விழாவை தொடங்கி வைத்துள்ளோம். 

திருக்கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை  34 சதவீதத்திலிருந்து 38 % உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  ஊக்கத் தொகையாக இருந்த 1000 ரூபாய் 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற பூசாரிகளுக்கு 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாக ஓய்வூதியத்தை அதிகரித்துள்ளோம். ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சிப்பவர்களுக்கு முதலமைச்சர் தனது செயல்பாடுகள் மூலம் பதிலளித்து வருகிறார். 

மயிலை கபாலீஸ்வரர் கோயில் உண்டியல் எண்ணும் பணி வெளிப்படையாக இருக்க வேண்டுமென்பதற்காக டிஜிட்டலில் நேரலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக அனைவரும் பார்க்கும் வகையில் உண்டியல் எண்ணும் பணி வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார்.