×

அண்ணாமலை முதலில் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிவை பயன்படுத்தி வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் தேங்காய் பட்டினம்  மீன் பிடித்து துறைமுக  மறுசீரமைப்பு கனிம வளங்கள் அதிக பாரங்கள் ஏற்றி செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் தலைவர். அவர் நான் விவசாயம் செய்து பிழைத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். அது முதலமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் இயலாது என்று கூறி இருக்கிறார். பாஜக தலைவர் பேசி வருகின்ற சனாதனதர்மம் மனுநீதி சாஸ்திரம் போன்றவை அவரைப் போன்றவர்களை அந்த குலத் தொழிலை செய்வதற்கு தான் வலியுறுத்துகிறது ஆனால் அதைத் தாண்டி அவர் கல்வி பெற்று ஐபிஎஸ் ஆகி இருக்கிறார் என்றால் அது திராவிட இயக்க அரசியலின் அடிப்படை .  

இல்லையென்றால் அவர் விவசாயம் தான் செய்திருப்பார். வேறு வாய்ப்பே இல்லை அவர் தனது அறிவை பயன்படுத்தி வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து விட்டு பேசினால் சரியாக இருக்கும். அவர் இன்று சொல்லி இருப்பது உண்மைதான் அவரது  நிலைமை அப்படித்தான் இருந்திருக்கும். அவர் பேசுகின்ற சனாதனமும் மனுநீதியும் மீண்டும் வந்தால் சட்டத்தின் ஆட்சி இருக்காது. அடிப்படை உரிமைகள் இருக்காது.  இந்திய துணைக்கண்டத்திலும் தமிழகத்திலும் இருப்பது மதசார்பற்ற அரசு எனவே மதங்களுக்குப் பின்னால் அரசு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. திமுக அரசு எந்த வழிபாட்டு முறைக்கும் எதிரானது அல்ல. இது எல்லோருக்குமான அரசாக இருக்கிறது. பாஜக சிலவற்றை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. வாழ்த்துக்கள் சொல்லுவது அவரவர் விருப்பம். இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்வது ஏற்கத்தக்கது அல்ல அண்ணாமலைக்கு தான் வருத்தமாக உள்ளது. வேறு யாரும் வருத்தப்படவில்லை தமிழர்களின் பண்பாட்டு நெறிமுறைகளை திமுக அரசு பின்பற்றி வருகிறது” என்றார்.