×

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை- அமைச்சர் மா.சு.

 

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி காத்திருப்பில் இருந்த 2400 செவிலியர்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டனர்.

கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்ததில் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க பணியும், தன்னலமற்ற சேவையும் பிரதான காரணமாகும். இப்பணியினை தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும், அமைப்புகளும் பாராட்டினர்.

இந்நிலையில், எம்.ஆர்.பி தேர்வு எழுதி மதிப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள 2400 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு இவர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்து, நிரந்தர தன்மையற்ற தற்காலிக பணியாளர்களாக மாற்றுப் பணியில் பணியமர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் செவிலியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தையில், டி.எம்.எஸ் மூலம் பணி நீட்டிப்பு வழங்க இயலாதென அதிகாரிகள் கூறியதால் போராட்டம் தொடரும் என செவிலியர்கள் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செவிலியர்களை பணி நிரந்திரம் செய்ய வாய்ப்பில்லை. ஆனால் ஒப்பந்த செவிலியர்களை அரசு கைவிடாது. ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணிநியமனம், தற்காலிக செவிலியர்கள் இடமாற்றம் செய்வது இயலாத காரியம். மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களுக்கான காலி பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமைஒ அளிக்கப்படும், போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.