×

நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கு ஈபிஎஸ் தான் காரணம்- மா.சு.

 

நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிதான் பொறுப்பேற்க வேண்டுமென மருத்துவத் துறை அமைச்சர் 
மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, குடற்புழு நீக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  ஆல்பென்ட்சோல் எனும் குடற்புழு நீக்க மாத்திரைகள் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை, எம்.ஜி.ஆர் நகரிலுள்ள தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “குடற்புழு நீக்கும் திட்டம் 2011-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மாநில அளவில் தொடங்கப்பட்டு, தற்போது தேசிய அளவில் செயல்பாட்டில் உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் 2 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளியில் 900 மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும் அதில் மாத்திரை உட்கொண்ட 3 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இது குடற்புழு நீக்க மாத்திரையால் ஏற்பட்ட பாதிப்பில்லை. மாணவர்களுக்கு உண்டான பயம் மற்றும் பதற்றத்தினால் ஆன பாதிப்பு. நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்துள்ளதற்கு, கடந்த ஆண்டை விட 3 சதவீதமே குறைந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே  நீட் தேர்வு முடிவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.

நீட் தேர்வால் மரணமடைந்த ஸ்வேதா தொடர்பாக விடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பற்றிய கேள்விக்கு, எடப்பாடி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதாகவும் நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். நீட் தேர்வு முடிவுகளை ஒன்றிய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் வெளியிட்டதையடுத் து, முடிவுகளை பார்த்து அதிர்ச்சியுற்ற மாணவர்களுக்கு ஆதரவுக்கான நபர்கள் அருகில் இல்லாத சூழலால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.