×

அதிமுகவை முடக்க வெளியே இருந்து ஆட்கள் வர தேவையில்லை; அதிமுக உள்ளேயே நிறைய பேர் உள்ளனர்- அமைச்சர் மா.சு

 

அதிமுகவை முடக்குவதற்கு வெளியே இருந்து ஆட்கள் வர தேவையில்லை, அதிமுக உள்ளே நிறைய பேர் உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டி காந்தி மணிமண்டபத்தில் உள்ள, தியாகிகள் மணிமண்டபம் முன்பு வைக்கப்பட்டுள்ள தியாகிகள், சங்கரலிங்கனார், செண்பகராமன் பிள்ளை ஆகியோரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சாமிநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகர்ராஜா, அரவிந்த் ரமேஷ்  மற்றும் மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார், அகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், “தமிழகத்தை சென்னை மாகாணம் என்று அழைத்து வந்த காலத்தில் அதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து, அரசுக்கு கோரிக்கை வைத்த தியாகி
 சங்கரலிங்கனார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் ஆங்கிலேயருடைய கொடி பறந்து கொண்டிருந்த காலத்தில் அதை இறக்கி இந்திய தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய சுதந்திர போராட்டமூலம் தாக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்யா என்கின்ற பாஷ்யம். சுதந்திரப் போராட்டத்தில் தேசிய விடுதலைக்காக குரல் கொடுத்து போராடியவர் செண்பகராமன் பிள்ளை. அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இவர்களை போற்றும் விதமாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மணிமண்டபம் கட்டினார் என்றார். காமராஜர் மணி மண்டபம் மட்டும் அல்ல, காந்தி மண்டபத்தில் உள்ள அனைத்து தலைவர்களின் மணிமண்டபத்தை புரனமைப்பு செய்ய ரூ.3.38 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடும் என அவர் தெரிவித்தார். அதிமுகவை முடக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர், அதிமுகவை முடக்குவதற்கு வெளியே இருந்து ஆட்கள் தேவையில்லை, அதிமுக உள்ளே நிறைய பேர் உள்ளனர்” என தெரிவித்தார்.