×

மின்கட்டண உயர்வு, மின்வாரிய துறை நாசமாவதற்கு அதிமுக அரசுதான் காரணம்- அமைச்சர் ஐ.பெரியசாமி

 

மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருகிறது அதனை தமிழக முதல்வர் எதிர்த்து வருவதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்துப்பட்டியில் இன்று 23.07.22 புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில்  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “மத்திய அரசு, மாநில அரசுகளின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட்டு பறித்து வருகிறது, அதை எதிர்க்கின்ற ஒரே வல்லமை படைத்தவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். வேறு யாரும் கிடையாது. மத்திய அரசு செய்கின்ற ஆதிக்கம், அராஜக போக்கை தட்டிக் கேட்கின்ற ஒரே முதல்வர் தமிழக முதல்வர் தான். அதிமுகவை பொறுத்தவரை மத்திய அரசு கண்டித்து போராட்டம் நடத்த மாட்டார்கள், மக்களை ஏமாற்றுவதற்காக நாடகம் போடுகின்றனர். உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக தான். ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டார். 

கடந்த திமுக ஆட்சியின் போது உதய் மின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அப்போதைய மத்திய அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை மறைந்த முதல்வர் கருணாநிதி ஏற்கவில்லை. மின்சார வாரியத்திற்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்படுவதற்கு காரணம் அதிமுக அரசுதான். மின்துறையவே நாசப்படுத்தியது அதிமுகதான், அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று சொல்வது நியாயம் அல்ல. கடந்த ஏழு வருடமாக மின்சார கட்டணம் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. கொரோனா காலகட்டத்தில் நியாய விலைக் கடையில் வேலை பார்த்த விற்பனையாளர்களுக்கு பஞ்சப்படியை 28 சதவீதமாக உயர்த்தி கொடுத்தது தமிழக முதல்வர் தான். மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து விட்டனர். மத்திய அரசின் அடிமையாகவே அதிமுகவினர் இருந்துள்ளனர்” என தெரிவித்தார்.