×

அடுத்தாண்டு ஜனவரியில் கலைஞர் நூலகம் திறக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

 

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நுாலகத்தின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும், 2023 ஜனவரியில் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நுாலகத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கலைஞர் நுாலகப் பணிகள் 99 சதவீதம் முடிந்து ஜூலை 30க்குள் கட்டுமான பணிகள் முடிவடைய உள்ளது. அதன்பின் ஒவ்வொரு தளத்திலும் அலங்கார பணிகள் நடைபெறும். அதை தொடர்ந்து 3 தனியார் நிறுவனங்கள், பொதுப்பணித்துறையினர், நுாலகத்தில் புத்தகங்களை எங்கே வைப்பது, குழந்தைகளுக்கான வசதிகள், வெளியில் பூங்கா, பார்க்கிங் வசதிகள் குறித்து கலந்து பேசி பணிகள் நடக்கும். அதன்பின் முதல்வர் வரும் ஜனவரியிலோ அதற்கு முன்போ, பின்போ திறப்பது குறித்து அறிவிப்பார்.

வாகனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாதது. ஒருமரம் வெட்டினால் 10 மரங்களை நட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதற்காக 6 முதல் 9 அடி வரை வளர்ந்த மரக்கன்றுகளை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து வாங்கி வைத்துள்ளோம். நெடுஞ்சாலை டோல்கேட்களில் கட்டண வசூல் செய்ய அரசு, தனியார் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் டோல் வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் 60 கி.மீ.,க்கு ஒரு டோல் கேட் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி முதன்மை கண்காணிப்பாளர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.