×

கோயில்களில் டெபிட் கார்டுகள் மூலமும் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் - அமைச்சர் சேகர்பாபு

 

கோயில்களில் டெபிட் கார்டுகள் மூலமும் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
 

சென்னை நுங்கம்பாக்கத்தில்  உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்  550 திருக்கோயில்களுக்கு 1500 விற்பனை முனையங்களை வழங்கி புதிய வசதியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதில் முதற்கட்டமாக பார்த்தசாரதி திருக்கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் திருக்கோவில், வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு POS இயந்திரங்கள்  வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, கோயில்களுக்கு முன்பதிவு செய்யும் வசதிக்காக கையடக்க கணினி வழங்கப்படுவதாகவும், எனவே பொதுமக்கள் டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

அயோத்யா மண்டபம் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடனும், முதலமைச்சருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் எந்த கோவிலில்களுக்கு உரியவை என்ற ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கே ஒப்படைக்கப்படும் என்றார். 
 
தஞ்சை சப்பரம் திருவிழாவை அந்த பகுதி பொதுமக்களே நடத்தியுள்ளனர் என்றும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அந்த கோயில் இல்லை என்றும் கூறினார். வருங்காலங்களில் இனி இதுபோன்ற எந்த சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இது தொடர்பான விளக்கம் நேற்றே பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.