×

பழனி கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் - அமைச்சர் சேகர்பாபு 

 

பழனி கோயில் குடமுழுக்கிலும் ஆகம விதிப்படி தமிழில் மூல மந்திரங்கள் ஓதப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

எம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற ஜனவரி 27ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் .

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு,  முதல்முறையாக பழனி கோயில் குடமுழுக்கிற்கு முழுக்க முழுக்க பத்திரிகை, தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்களை வைத்து தமிழிசை வேத மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக அரசு பதவியேற்ற பிறகு தமிழை வளர்த்து வருகிறது.  திமுக ஆட்சியில் தேவாரமும் திருவாசகமும் அனைத்து கோயில்களிலும் ஒலிக்கின்றன. பழனி கோயில் குடமுழுக்கிலும் ஆகம விதிப்படி தமிழில் மூல மந்திரங்கள் ஓதப்படும். இவ்வறு கூறினார்.