×

மாதம் ரூ.1000 திட்டத்தால் அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதே சவாலாக உள்ளது- பொன்முடி

 

’புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுவதால் அரசு மகளிர் பள்ளிகளில் இடம் கிடைப்பதே சவாலாக இருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளின்  17 வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளை சேர்ந்த  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்து இளங்கலை, முதுகலை பொறியியல் பட்டங்களை பெற்றுக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் மேடையில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, “சமஸ்கிருதம், இந்திக்காக ரூ.643 கோடி செலவு செய்துள்ள மத்திய அரசு  தமிழுக்காக 23 கோடி தான் செலவு செய்துள்ளது, இந்தியால் எந்த பயனும் இல்லை , இருமொழிக்கொள்கை போதுமானது, ஒருகாலத்தில் பெண்கள் உயர் நிலைக் கல்வி பயிலாத காலமாக இருந்தது, இன்று 4012 மாணவிகள்  பட்டம் பெற்றுள்ளளர். பதக்கம் பெற்ற 283 பேரில் 117 ஆண்கள், பெண்கள் 166 நபர்கள். இதுதான் திராவிட மாடல். 

கலை , அறிவியல் மட்டுமின்றி பொறியியல் பயில்வோரும் ( inter disciplinary ) வரலாறு பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும்.  வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் , மாணவர்கள்  வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும் என்பதே முதல்வரின் 'நான் முதல்வன்' திட்டம். மாணவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் ,ஆனால் சமுதாயத்தின் மீது உணர்வு இருக்க வேண்டும். பொறியியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வை ரத்து செய்த பிறகே கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது , ஆனால் தற்போது BA , BSC க்கு கூட நுழைவுத்தேர்வை கொண்டுவர பார்க்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தினால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகமாகும் . 

புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளியில் பயின்று , உயர்க்கல்வி சேரும்   மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் உலகின் ஒரே மாநிலம் தமிழகம்தான். கல்லூரிகளில் உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பதால் , அரசு மகளிர் பள்ளியில் இப்போது இடம் கிடைப்பதே சவாலாக இருக்கிறது. மாணவிகளிடம் அவர்களது தாய்... முதலமைச்சர் கொடுத்த ஆயிரம் ரூபாயில் எனக்கு ஒரு 100 ரூ கொடுப்பா... என்று கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.